வாரிசு நடிகர்களால் எனது வாய்ப்பு பறிக்கப்பட்டது - ரிச்சா சதா!

2008-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஓய் லக்கி! லக்கி ஓய் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ரிச்சா சதா.

அதனைத் தொடர்ந்து இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், தாஸ் தேவ், பங்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா  சதா.

துணை நடிகையாக அறிமுகமாகி பின் நடிகையாக பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப்  பிடித்திருக்கிறார் நடிகை ரிச்சா சதா.

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஷகிலா வேடத்தில் நடித்து பான் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் ரிச்சா சதா.

'ஹீரா மண்டி தி டைமண்ட் பஜார்' என்ற வெப் தொடர் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

'ஹீரா மண்டி தி டைமண்ட் பஜார்' வெப் தொடரில்  நடித்த கதாநாயகிகளில் ரிச்சா சதாவும் ஒருவர். அவரது நடிப்பை சிலர் இந்தி நடிகை மாதுரி தீட்சித்தோடு ஒப்பிட்டு பாராட்டினார்கள்.

இதுகுறித்து பேசிய ரிச்சா சதா இதுபோன்ற பாராட்டுகள் எனக்கு ஒரு நன்மையும் செய்யாது என்று தெரிவித்துள்ளார்.

நடிப்பதற்கு ஆரம்பித்த காலத்தில் நான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை என்னால் மறக்க முடியவில்லை என ரிச்சா சதா கூறியுள்ளார்.

படத்தில் நடிக்க நடிகை தேர்வுக்கு அழைப்பார்கள். நானும் சென்று செலக்ட்டாகி இருப்பேன். கடைசியாக நடிகர், நடிகையின் மகளோ அல்லது குறிப்பிட்ட கதாநாயகனின் காதலியோ தேர்ந்தெடுக்கப்படுவார்.

இப்படி வாரிசு நடிகர், நடிகைகளுக்காக பலமுறை என்னை பலியாக்கினார்கள் என்று நடிகை ரிச்சா சதா தெரிவித்துள்ளார்.