TVK Vijay: விஜய் மாநாடு தள்ளிப்போகிறதா? விளக்கம் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதில் அளிப்போம். அதற்கான ஆலோசனையில் கட்சியின் சட்டப்பிரிவு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் மாநாடு தள்ளிப்போகிறதா? நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்காத பட்சத்தில் மாநாட்டை வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்காலம் என்பதால் அப்போது மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என அவர் கருதுகிறார். எனவே, மாநாடு தள்ளிப்போகும் பட்சத்தில் வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுச் செயலாளர் ஆனந்த் ஜோதிடரை அணுகியதாக தகவல்கள் வெளியானது. இப்படியான சூழலில் நேற்று புஸ்ஸி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்துள்ள அவர், ”காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதில் அளிப்போம். அதற்கான ஆலோசனையில் கட்சியின் சட்டப்பிரிவு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, எங்கள் கட்சியின் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் முதல் மாநாடு:
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
இந்த மாதம் கடைசியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார். மாநாட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பை தனது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைத்து இருந்தார். இதனால், கடந்த 2 மாதமாக புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் மதுரை, திருச்சி பகுதிகளில் இடம் தேடி வந்ததாக தெரிகிறது. அங்கு மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததை அடுத்து, விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் சூர்யா கல்லூரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
Also Read: தமிழகத்தில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை… ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ!
மாநாட்டை நடத்த அனுமதி கேட்டு த.வெ.க சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் அதில் தொடர் இழுபறி நீடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பதில் அளிக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்திற்கு விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 21 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் கடிதம் கிடைத்த பிறகே டி.எஸ்.பி மாநாட்டிற்கான அனுமதியை வழங்குவார் என்று கூறப்படுகிறது.