Annamalai: அண்ணாமலைக்கு ரூ.500 லஞ்சம் கொடுத்த தாத்தா.. நடந்தது என்ன?
TN BJP: யாரோ ஒருவர் தன்னுடைய வேலையை செய்யாததால் அதனை செய்யுங்கள் என கொடுப்பது தான் லஞ்சம் என்பது என தெரிந்தது. விருப்பப்பட்டு யாரும் லஞ்சம் கொடுப்பது இல்லை. பிரச்னையை தீர்க்க போய் சிவில் கோர்ட்டில் என் மீது வழக்கு தொடரப்பட்டு 2 ஆண்டுகள் நடந்தது என அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை: தமிழக பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் கர்நாடகா காவல்துறையில் பணியாற்றினார். தமிழக அரசியலில் குறுகிய காலத்திலேயே தனக்கென தனியிடம் பிடித்த அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட கதையை தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “எந்த இடத்திலும் கூட லஞ்சம் கொடுப்பதை நீங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். அதில் மாற்று கருத்தே இல்லை. லஞ்சம் இருப்பதை நெஞ்சை நிமிர்த்தி நீங்கள் எதிர்க்க வேண்டும். நான் கர்நாடகாவில் காவல்துறையில் இருக்கும்போது, ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தேன்ன். அப்போது நான் வேலைக்கு சேர்ந்து 3 மாதத்தில் ஒரு தாத்தா என்னைப் பார்க்க வந்திருந்தார். நான் பணியாற்றிய அலுவலகம் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள காரங்கலா என்ற சிறிய ஊராகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடியில் அந்த ஊர் இருக்கும்.
மறைக்க முயன்ற உதவியாளர்
அந்த தாத்தா என்னைப் பார்க்க வந்தபோது எனக்கு கன்னடம் பேச தெரியாது. பணியில் சேர்ந்த முதல் 6 மாதம் எனக்கு தெரிந்த தமிழ், ஆங்கிலத்தில் தான் பேசி வந்தேன். அந்த தாத்தாவோ கன்னடம் மட்டுமே பேசக்கூடியவர். அலுவலகத்தில் இருக்கும் உதவியாளர் அந்த தாத்தாவை அழைத்து வந்து உட்கார வைத்தார். அவர் கையில் கன்னடத்தில் எழுதிய மனு ஒன்று இருந்தது. அது நிலம் சம்பந்தப்பட்ட புகார். கன்னடம் எனக்கு படிக்கவும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். தாத்தா என்ன எழுதியிருக்கிறார் என உதவியாளரிடம் கேட்டேன். அவர் 4 பக்கம் கொண்ட அந்த மனுவில் இரண்டு பக்கம் படித்து விட்டு மூன்றாம் பக்கத்தை படிக்காமல் மறைக்க முயன்றார். பக்கத்தை படிக்காமல் தடுமாற அதில் ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு என்னவென்று கேட்டேன். அந்த உதவியாளர் நேர்மையான மனிதர் என்பதால் ஒன்றும் இல்லை என சொல்லி நீங்கள் பார்க்க வேண்டாம் என சொன்னார்.
நான் வற்புறுத்தி கேட்கவும், அந்த 3ம் பக்கத்தில் ரூ.500 இருந்தது. என்னுடைய புத்தகத்தில் இதை எழுதியிருப்பேன். அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. பயிற்சி முடித்து விட்டு அப்பதான் வர்றோம். லஞ்சம் யார் மூலமோ வருவதை பார்த்து கோபப்பட்டு எதற்காக பணம் வைத்துள்ளீர்கள் என கேட்டேன். நான் கொஞ்சம் பொறுமையாக அந்த தாத்தாவிடம், நான் இப்பிரச்னையை தீர்க்கவில்லை என்றால் எஸ்பி, ஐஜி இருக்கிறார்களே, பின்னர் ஏன் பணம் வைத்துள்ளீர்கள் என கேட்டேன்.
2 ஆண்டுகளாக நடந்த வழக்கு
அதற்கு அந்த தாத்தா, நிலம் பிரச்சினை என்பதால் காவல்நிலையத்துக்கு சென்றால் தாசில்தார் ஆபீஸ், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், தேவையான ஆவணங்களை கொண்டு வாருங்கள் என சொல்வார்கள். என்னுடைய நிலத்தில் பக்கத்து நிலத்துக்காரர் வேலி போட்டு விட்ட சாதாரண விஷயம். 6 மாதமாக அலைகிறேன் என சொல்லவும் தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. யாரோ ஒருவர் தன்னுடைய வேலையை செய்யாததால் அதனை செய்யுங்கள் என கொடுப்பது தான் லஞ்சம் என்பது என தெரிந்தது. விருப்பப்பட்டு யாரும் லஞ்சம் கொடுப்பது இல்லை. பிரச்னையை தீர்க்க போய் சிவில் கோர்ட்டில் என் மீது வழக்கு தொடரப்பட்டு 2 ஆண்டுகள் நடந்தது. லஞ்சம் கொடுக்காதீர்கள் என சொல்லி அந்த தாத்தாவுக்கு உதவ போய் உபத்தரத்தில் தான் முடிந்தது. லஞ்சம் என்பது இந்தியாவில் திரும்ப திரும்ப எல்லா இடத்திலும் இருக்கிறது” என அண்ணாமலை தெரிவித்தார்.