TN Cabinet Meeting: அக்டோபர் 8ல் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு!
சட்டமன்ற தேர்தலுக்கு 15 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மக்களிடையே திமுக அரசின் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்கள், இன்னும் அரசின் திட்டம் முழுமையாக கிடைக்கப் பெறாதவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படும் என தெரிகிறது. அதேசமயம் இந்த கூட்டத்தில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், போக்குவரத்து வசதிகள் சரியாக ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
தமிழக அரசு: தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க செல்லவிருந்த நிலையில், தான் இங்கு இல்லாத நேரத்தில் நடக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு இரண்டு புதிய அமைச்சர்கள் கோவி. செழியன், ராஜேந்திரன் பதவியேற்றனர். ஏற்கனவே பதவியில் இருந்த இரண்டு அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் ஆவடி நாசர் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். அதே சமயம் பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், ராஜ கண்ணப்பன், மெய்யநாதன் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டம் 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு 15 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மக்களிடையே திமுக அரசின் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்கள், இன்னும் அரசின் திட்டம் முழுமையாக கிடைக்கப் பெறாதவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படும் என தெரிகிறது. அதேசமயம் இந்த கூட்டத்தில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், போக்குவரத்து வசதிகள் சரியாக ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாடவும், பண்டிகை நாட்களில் அனைத்து வியாபாரிகளும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை வகுக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு வெள்ளச்சேதம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டந்தோறும் உள்ள அதிகாரிகளை அறிவுறுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.