ஃபெங்கல் புயல்.. 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்.. எப்போது தெரியுமா?
Cyclone Fengal : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
மின் கட்டணம் செலுத்த அவகாசம்:
இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10.12.2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்படுகிறது.
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய சாலைகளில், தெருக்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதனால் போக்குவரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வெளியே வரவில்லை அனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வட சென்னையில் பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
Also Read : கரையை கடக்கத் தொடங்கிய ஃபெங்கல் புயல்.. இயல்பு நிலைக்கு திரும்புமா சென்னை?
தற்போது ஃபெங்கல் புயல் எங்கே?
திருநின்றவூர்- திருவள்ளுர் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட பகுதிகிளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர் பகுதிகளில் பல தெருக்களில் வெள்ளம் வடியாத நிலையில் உள்ளன.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் பாதித்த இடங்களில் இருக்கும் மக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தாழ்வான பகுதியில் இருப்பவர்களும் பத்திரமாக நிவாரண முகாமகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபெங்கல் புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலை 5.30 மணிக்கே கரையை கடக்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஃபெங்கல் புயலின் முன்பகுதி கரையை தொட்டுள்ளது. இந்த புயல் இன்று இரவுக்குள் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி அருகே கரையை கடக்கக் கூடும்.
Also Read : வெள்ளக்காடாக மாறிய சென்னை.. பரிதவிக்கும் மக்கள்.. தீர்வு எப்போது?
தற்போது புதுச்சேரியில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. இந்த புயல் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் முழுவதுமாக கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் ஃபெங்கல் புயல் கரையை கடக்கக் கூடும். கரையை முழுவதுமாக கடக்கும்போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.