Evening Digest 11 November 2024: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. ஆட்சியர் மீது தாக்குதல்.. டாப் 10 செய்திகள்!
இன்றைய (நவ.11, 2024) முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள்: நவம்பர் 11 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று காலை முதல் தற்போது வரை பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, தெலங்கானாவில் மாவட்ட ஆட்சியர் மீது சரமாரி தாக்குதல், பெண்ணாக மாறிய கிரிக்கெட் வீரரின் மகன், ட்ரம்பிடம் பேசிய விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நாம் காணலாம்.
தமிழ்நாடு
- தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தீவிரம் அடைந்து தமிழக நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விரிவாக படிக்க
- திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் செயல்படும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் பொன்சிங். இவர் 5 மாணவிகளை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தூத்துக்குடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பொன்சிங் கோவை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விரிவாக படிக்க
- திருவண்ணாமலையில் காதலித்து திருமணம் செய்த நிலையில் மனைவி சரண்யாவை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து கணவன் கோபி காட்டுப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தீபாவளி தினத்தன்று இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் 12 நாட்கள் கழித்து உண்மையை வெளியில் உள்ளது. இந்த சம்பவத்தில் கோபியின் தாய் மற்றும் கார் ஓட்டுநர்கள் ஆகிய இருவரையும் கைது செய்ய பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.விரிவாக படிக்க
- சென்னையில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தார். டை பிரேக்கர் முறையில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் லெவோனை வீழ்த்தினார்.
- பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாகவும், மறைமுக ஒப்பந்தத்துடன் திமுக செயல்பட்டு வருவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறிய அவர் இப்போது மட்டுமில்லை எப்போதும் பாஜகவுடன் எந்த ஒட்டும் உறவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
- மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் இன்று நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தனது 80 வயதில் உடல் நலக்குறைவால் காலமான அவரின் உடலுக்கு திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்தியா
- மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆயுதக்குழுவை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விரிவாக படிக்க
- தெலுங்கானாவில் மருந்து நிறுவனம் அமைக்க அரசு விஹாராபாத் மாவட்டத்திலுள்ள லகாசர்லா கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபடுட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர், தாசில்தார், மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் கிராம மக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. விரிவாக படிக்க
- அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் அருள்பாலித்து வரும் குழந்தை ராமருக்கு குளிர்காலத்தை முன்னிட்டு டெல்லியில் இருந்து கம்பளி போர்வைகள் மற்றும் சால்வைகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது. கருவறையில் தினமும் குளிர்காலத்தில் குழந்தை ராமருக்கு வெதுவெதுப்பான நீரில் அபிஷேகம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர் காலத்தில் தயிர் சாதத்திற்கு பதில் உலர் பழங்கள் வைத்து வழிபாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
உலகம்
- இலங்கையில் 9வது அதிபராக பதவியேற்ற அனுரா குமார திசநாயகே முதல்முறையாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது ஜாப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பக்கத்தில் வாழும் தமிழர்கள் அரசால் தங்களிடமிருந்து கட்டாயப்படுத்தி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காக இன்றும் போராடி வருகின்றனர். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் அனைத்தும் தமிழர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
- அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலின் போது ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
விளையாட்டு
- இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியுள்ளார். தனது பெயரை அனயா என மாற்றியுள்ள அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.