5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 10 November 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய ( 10 November 2024) முக்கியச் செய்திகள்: நம்மை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். முக்கிய செய்திகளை இதில் சுருக்கமாக தெரிந்துக்கொள்ளலாம்.

Evening Digest 10 November 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
இன்றைய டாப் செய்திகள்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 18 Nov 2024 14:56 PM

நவம்பர் 10ம் தேதியான இன்று காலை முதல் இரவு வரை என்ன நடந்தது என்ற விரிவான செய்தி குறிப்புகளை இங்கே பார்க்கலாம். இன்றைய நாள் கொஞ்சம் சோகம் நிறைந்த நாளாகவே தமிழ்நாட்டில் இருந்தது. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இன்று இந்த உலகத்தில் இருந்து விடை பெற்றனர். விருதுநகர் அருகில் உள்ள அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடி செலவில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு:

  • தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல் கீழடு சுழற்சியானது, இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக தாமதம் ஆனால், அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விருதுநகர் அருகில் உள்ள அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடி செலவில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் காரியாபட்டி வட்டத்தில் தெற்காற்றின் குறுக்கே புதிய அணை ஒன்று ரூ. 21 கோடி ரூபாய் செலவிலும், விருதுநகர் வட்டத்தில் இருக்கின்ற கௌசிகா ஆறு மற்றும் அருப்புக்கோட்டை வட்டத்தில் இருக்கிற கஞ்சம்பட்டி கண்மாய் போன்ற நீர்நிலைகள் ரூ.41 கோடி செலவிலும் சீரமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரை, குறும்படம் ஆகியவற்றிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள 80 வயதான டெல்லி கணேஷ் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமான தூக்கத்திலேயே ராமநாதபுரத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது இறப்பிற்கு பிரலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விரிவாக படிக்க
  • இந்திரா சௌந்தர்ராஜன் பிரபல ஆன்மீக எழுத்தாளர் இன்று காலமானார். இந்திரா சௌந்தர்ராஜன் (வயது 66) தனியார் நாளிதழ், வார இதழ்களில் ஆன்மீக தொடர்கள் எழுதி வந்தவர். ஆன்மீக சொற்பொழிவாளர். 13 நவம்பர் 1958ல் பிறந்தவர். நாளை மறுதினம் அவருக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. புற்றுநோய் காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 9 மணி அளவில் வீட்டில் கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார். கழிவறை கதவை உடைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரிவாக படிக்க

இந்தியா:

  • தமிழ் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தனது இரங்கல் பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “புகழ்பெற்ற திரையுலக ஆளுமை திரு டெல்லி கணேஷ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். நடிப்பில் அவர் அபாரமான திறமை கொண்டவர். ஏற்றுக்கொண்ட பாத்திரங்களை ஆழமாக வெளிப்படுத்திய விதத்திற்காகவும் தலைமுறை கடந்து ரசிகர்களைக் கவர்ந்த திறமைக்காகவும் அவர் என்றென்றும் அன்போடு நினைவுகூரப்படுவார்.” என பதிவிட்டுள்ளார். விரிவாக படிக்க
  • பெங்களூருவில் வீட்டு மாடியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்த இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில் இந்த ஜோடி போலீசில் வசமாக சிக்கியுள்ளது. விரிவாக படிக்க

உலகம்:

  • கனடாவில் காலிஸ்தான் வாக்கெடுப்பு என அழைக்கப்படும் பொது வாக்கெடுப்பின் முதன்மை அமைப்பாளரை கனேடிய போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரேட்டர் ரொறொன்ரோ பகுதியில் (ஜிடிஏ) உள்ள இந்து கோயிலில் வன்முறை படையெடுப்பு தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, பீல் பிராந்திய காவல்துறை (PRP) வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராம்ப்டனில் வசிக்கும் 35 வயதான இந்தர்ஜீத் கோசல் கைது செய்யப்பட்டதாகவும், ஆயுதங்கள் ஏந்திய படி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • தேர்தலுக்கு பிறகு கமலா ஹாரிஸ் உரையாற்றிய போது பல பெண்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது.  ஏனென்றால் டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது.  இதனால் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுக்கு எதிராக அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க

விளையாட்டு:

  • ஹைப்ரிட் முறையில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்தால், சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இந்திய அணி வெளியேறும். சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இந்திய அணி வெளியேறினால், எந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. விரிவாக படிக்க
  • பாகிஸ்தான் அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணி மோசமான சாதனைப் படைத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2 வது ஆட்டத்தில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News