Chennai Formula 4 Race: சென்னையில் இன்று தொடங்கும் ஃபார்முலா 4 ரேஸ்.. நேரில் பார்ப்பது எப்படி? டிக்கெட் விலை என்ன?
சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என்று இரண்டு நாட்கள் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த கார் பந்தயம் இரவு நேரத்தில் நடைபெற உள்ளது. ஆசியாவின் முதல் இரவு நேர ரேஸாக இது நடக்க உள்ளது. தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெற உள்ளது.
சென்னையில் நாளை கார் பந்தயம்: சென்னையில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த கார் பந்தயம் இரவு நேரத்தில் நடைபெற உள்ளது. ஆசியாவின் முதல் இரவு நேர ரேஸாக இது நடக்க உள்ளது. தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெற உள்ளது. . அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பந்தயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் நடக்கும் பந்தயத்திற்கு இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரத்யேக கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஃபார்முலா 4 ரேஸ்:
ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 என பல்வேறு விதமான பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஃபார்முலா 1 தான் உச்சபட்ச பந்தயமாக கருதப்படுகிறது. ஃபார்முலா 1 பந்தயத்திற்கு தகுதி பெற ஃபார்முலா 4 முக்கியமாக இருக்கிறது. பார்முலா 4 ரேஸ்க்கு தகுதி பெற ஒருவர் 3 ஆண்டுகளில் 40 சூப்பர் லைசன்ஸ் புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும். ஃபார்முலா 1 விதிமுறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை மற்ற ஃபார்முலா கார் போட்டிகளில் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு பந்தயத்திற்கும் ஒவ்வொரு விதமான விதிமுறையின் கீழ் தான் வாகனங்கள் தயாரிக்கப்படும்.
சென்னையில் நேரில் பார்ப்பது எப்படி?
சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கும் இடங்களில் 100க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் பந்தயம் நடைபெறும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என சுமார் 8,000 பேர் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கார் பந்தயத்தை பார்க்கும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பபட்டுள்ளன. பந்தயத்தை பார்க்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 4 அடி உயர கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டிக்கெட் விலை:
இந்த கார் பந்தயத்தை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விலை ரூ.1,699 முதல் ரூ.10,99 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் பேடிஎம் இன்சைடர் ஆப் மற்றும் வெப்சைட்டில் பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் போட்டிகளை பார்க்க தனி டிக்கெட்டும், செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் போட்டிகளை பார்க்க தனி டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இரண்டு நாள் போட்டிகளையும் பார்ப்பதற்கும் தனியாக தனி பாஸ் விற்பனை செய்யப்படுகிறது. அதன் ஆரம்ப விலை ரூ.2,125 முதல் ரூ.16,999 வரை நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்:
கார் பந்தயத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்களை கொண்டு வரக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கத்திரிக்கோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே, கத்திகள் போன்ற கூர்மையான பொருட்களை கொண்டு செல்லக் கூடாது. லேசர் விளக்குகள், செல்லப்பிராணிகள், அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகள், தீப்பற்றக் கூடிய பொருட்கள், புகையிலை மற்றும் போதைப்பொருள், வெளி உணவுகளை, தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் என எதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.