Nipha Virus : தீவிரமடையும் நிபா வைரஸ் தொற்று.. 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
நிபா வைரஸ் பாதிப்பு | கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அறிகுறிகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நிபா வைரஸ் : கேரளாவில் நாளுக்கு நாள் நிபா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுவனுடன் தொடர்பில் இருந்த இருவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்படுள்ளது. இதன் காரணமாக எல்லைகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வவ்வால் கடித்த பழத்தை சாப்பிட்ட சிறுவன்?
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்த 14 வயது சிறுவன். இவர் அவரது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் இருந்து பழங்களை பறித்து சாப்பிட்டுள்ளார். அந்த பழங்களை வவ்வால் கடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். மீண்டும் உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
- காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்னை மற்றும் மனநலப் பிரச்னை போன்றவை நிபா வைரசின் முக்கிய அறிகுறிகளாகும்.
- அறிகுறிகள் இருப்பவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
- அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளி உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
- காய்கள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
- கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
- நோயாளிகளை பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
- அறிகுறிகள் உள்ளவர்களின் ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதை செய்யப்பட வேண்டும்.
- நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாப்பாக வைத்து 48 மணி நேரத்திற்குள் அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.
- பரிசோதனை முடிவுகளைம் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க : America Election 2024 : அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன்.. ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்!
இவ்வாறு நிவா வைரஸ் குறித்து அரசு வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றி தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.