Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி.. பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி?
விநாயகர் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை என்றாலே பலருக்கும் அவருக்கு பிடித்தமான பூரண கொழுக்கட்டை தான் வைத்து வழிபடுவது தான் நியாபகம் வரும். அவல்,பொரியும் விநாயகருக்கும் பிடிக்கும் என்றாலும் கொழுக்கட்டை என்றுமே ஸ்பெஷல் தான்.
விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை: முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை என்றாலே பலருக்கும் அவருக்கு பிடித்தமான பூரண கொழுக்கட்டை தான் வைத்து வழிபடுவது தான் நியாபகம் வரும். அவல்,பொரியும் விநாயகருக்கும் பிடிக்கும் என்றாலும் கொழுக்கட்டை என்றுமே ஸ்பெஷல் தான். கண்டிப்பாக அது விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் வைத்து வழிபட வேண்டும்.அப்படிப்பட்ட பூரண கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்பது பற்றி காணலாம்.
பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – 2 1/2 டீஸ்பூன்
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 கப்
பொடி செய்யப்பட்ட வெல்லம் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
அதேசமயம் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 2 கப்
உப்பு – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
சூடான நீர் – தேவையான அளவு
பூரண கொழுக்கட்டை செய்முறை
ஒரு கடாயில் வெள்ளை எள்ளைப் போட்டு அது பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.பின்னர் அதே கடாயில் நெய் விட்டு துருவிய தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும். இப்போது பொடி செய்யப்பட்ட வெல்லத்தை சேர்த்து அது முழுவதுமாக உருகும் வரை வதக்கி, பின்னர் தேங்காயும், வெல்லத்தையும் கலக்கவும்.இதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கி பூரண பதார்த்தத்திற்கு கொண்டு வரவும். இதில் முன்னதாக வறுத்த வெள்ளை எள்ளை இணைக்கவும்.
எல்லாவற்றையும் நன்றாகக் கலந்த பின்னர் கூடுதல் சுவைக்காக நெய் வேண்டுமானால் சேர்க்கலாம்.
அதேசமயம் ஒரு பாத்திரத்தில் 2 கப் அரிசி மாவை எடுத்து அதில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
அதை நன்றாக கலந்த பின்பு அதனுடன் எண்ணெய் சேர்க்கவும்.பின்னர் நன்கு சூடான நீரை ஊற்றி , சிறிதாக எண்ணெய் சேர்த்து மாவை பிசையவும். கொழுக்கட்டை பதார்த்தம் வந்த பிறகு மாவின் மீது எண்ணெய் தடவி சில நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் கொழுக்கட்டைக்கான அச்சு அல்லது கைகளால் பிடித்தோ நடுவில் தேங்காய் பூரணம் வைத்து மூடும்படி செய்யவும்.இதேபோல் மாவு அனைத்தையும் தேவையான வடிவத்தில் பூரணம் வைத்து கொழுக்கட்டை பிடித்துக் கொள்ளவும். இதனைத் தொடர்ந்து ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விடவும். அதன் உள்ளே இட்லி தட்டில் கொழுக்கட்டையை வைத்து மூடவும். 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான பூரண கொழுக்கட்டை ரெடி. இதனை பூஜை வழிபாட்டில் வைத்து சாப்பிட்டும், பகிர்ந்தளித்தும் மகிழலாம்.