5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கை.. ஆன்மிக வரலாறு இதுதான்!

History of Karthigai Deepam: காசியில் இறந்தால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஸ்தலம் தான் திருவண்ணாமலை என்பார்கள். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக குறிப்பிடப்படும் திருவண்ணாமலையின் கார்த்திகை தீப ஆன்மிக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கை.. ஆன்மிக வரலாறு இதுதான்!
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 06 Nov 2024 19:53 PM

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்று போட்டி ஏற்பட்டபோது சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். யார் எனது அடியையும் முடியையும் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்தான் பெரியவர் என்று சிவபெருமான் சொல்லி விடுகிறார். பின்பு ஜோதிப் பிழம்பாக சிவபெருமான் வானுக்கும் பூமிக்குமாக காட்சியளித்த அந்த ஜோதி நெருப்பே மலையாக மாறியது. சிவனின் அடியை காண்பதற்காக விஷ்ணு பகவான் வராக‌ பன்றி அவதாரம் எடுத்து பூமிக்குள் செல்வார்.‌அது போய்க்‌கொண்டே இருந்தது. திரும்பி வந்து ஐயனே என்னால் தங்களது அடியை காண முடியவில்லை என்று சிவபெருவானிடம் சரணடைந்து விடுவார்.

பிரம்மதேவன்  பொய்

மறுபக்கம் பிரம்மதேவர் அன்னப் பறவை உருவம் எடுத்து சிவபெருமானின் முடியை காண செல்வார். ஆனால் அவராலும் சிவபெருமானின் முடியை பார்க்க முடியாது. ஆனால் தன் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் தாழம் பூவை பொய்சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானின் முடியை கண்டதாக பிரம்மதேவன் கூறிவிடுவார். பிரம்மதேவன் கூறும் பொய்யை அறிந்து கொண்ட சிவபெருமான், இனி பூமியில் உனக்கு கோயிலோ பூஜையோ இருக்காது என்று சாபம் இடுவார்.

விஷ்ணு பகவான் உண்மையை கூறியதால் எனக்கு சமமாக உனக்கு கோயில்களும் பூஜையும் பூமியில் கிடைக்கும் என்று வரம் கொடுத்தார். பொய் சொன்ன தாழம்பூவை என்னுடைய பூஜையில் உன்னை யாரும் சேர்க்க மாட்டார்கள் என்று சபித்துவிடுவார் சிவபெருமான். இதன் காரணமாகவே சிவன் பூஜையில் இன்று வரை தாழம்பூ சேர்ப்பதில்லை.

Also Read: வாராகி அம்மன் வழிபாடு.. தஞ்சை பெருவுடையார் கோயில் கட்ட இடம் காட்டிய கடவுள்!

திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்து சிவபெருமான்:

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலையை நடத்துவார். பார்வதி தேவி இந்த ஸ்தலத்தில் வந்து சிவனுடன் மீண்டும் இணைய தவம் இருப்பார்கள். சிவபெருமான் பார்வதிக்கு காட்சி தந்த போது தனது இடது பாகத்தில் பாதி உடலாக ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பார். பிருங்கி முனிவர் உண்மையை உணர்ந்தார். இவ்வாறு சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும் சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய ஸ்தலம் தான் இந்த திருவண்ணாமலை.

பெயர் காரணம்:

அன்னுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.‌ பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் தான் அண்ணாமலை என்ற பெயர் பெற்றது. எனவேதான் இங்கு சிவன் அண்ணாமலையார் என்றும் இந்த ஊர் திருவண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறது.

நடந்து செல்லும் முறை:

கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கைலாயம் சிறப்பு வாய்ந்ததாக‌ இருக்கிறது. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை தான் இந்த ஸ்தலத்திற்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது.திருவண்ணாமலை கிரிவலம் மிகவும் புகழ் பெற்றதாக இருக்கிறது. இந்த மலையை சிவ லிங்கமாக கருதி சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் வலம் வருகிறார்கள்.இந்த மலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள்.

Also Read: Kandha Sasti 2024: கந்த சஷ்டி தினத்தில் இந்த தானியத்தை கொண்டு வழிபடுங்கள்! நினைத்த காரியம் நடக்கும்…!

இந்த மலையை சுற்றி நடக்கும் போது எங்கேயாவது தொடங்கி எங்கேயாவது முடிக்க கூடாது. மலையை சுற்றி 14 கிலோமீட்டர் பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது. இந்த கிரிவலப்பாதையில் எட்டு திக்கிலும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். அவை இந்திரலிங்கம் அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் ஆகும். இந்த எட்டு லிங்கங்களையும் வணங்கிதான் கிரிவலம் செல்ல வேண்டும்.

மலையை ஒட்டி உள்ள பக்கம் போகாமல் இடது பக்கமாக போக வேண்டும். நம்முடன் சித்தர்களும் நடந்து வருவார்கள் என்பது ஐதீகம். எனவே நாம் நடக்கும்பொழுது என்ன நினைக்கிறோமோ அதை சித்தர்கள் இறைவனிடம் கொண்டு செல்வார்கள் என்று நம்பப்படுகிறது. எனவே பேசிக்கொண்டே நடக்காமல் சிவனை நினைத்துக் கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கூறிக் கொண்டே நடக்க வேண்டும்.

சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வேறு திசையில் பார்க்காமல் வானத்து நிலவைப் பார்த்து ஒரு முறை வணங்க வேண்டும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக  நம்பிக்கை மற்றும் தகவலின்படி மட்டுமே எழுதப்பட்டது)

Latest News