Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவுக்கு உதவிய சென்னை சிறுமி.. 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதி திரட்டல்!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தொடர்ந்து மூன்று மணி நேரம் பரதநாட்டியம் ஆடியுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. பரதநாட்டியம் ஆடி கிடைத்த பணம் மற்றும் தனது சேமிப்பு பணம் ரூ.15,000 கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.
வயநாட்டிற்கு நிதி கொடுத்த தமிழக சிறுமி: கேரளா மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது. நான்கு மணி நேரத்தில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. எதிர்பாராவிதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவமானது நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தொடர்ந்து மூன்று மணி நேரம் பரதநாட்டியம் ஆடியுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
Also Read: அடுத்த அதிர்ச்சி… வயநாட்டில் நில அதிர்வு.. அச்சத்தில் கேரள மக்கள்!
இவர் சென்னையைச் சேர்ந்த ஹரிணி ஸ்ரீ என்று தெரியவந்துள்ளது. பள்ளி மாணவியான அவர் பரதநாட்டியம் படித்து வருகிறார். அந்த சிறுமி வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட 4 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பணம் மற்றும் தனது சேமிப்பு பணம் ரூ.15,000 கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.
நிதி தொகையை சிறுமி ஹரிணி ஸ்ரீ கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் வழங்கினார். நிவாரண நிதி திரட்டுவதற்காக பரதநாட்டியம் ஆடிய சிறுமி ஹரிணி ஸ்ரீயை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டினார்.
400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு:
கடந்த 29ஆம் தேதி கனமழை பெய்த நிலையில் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மண்ணோடு, மண்ணாக புதைந்து போயினர். கிட்டதட்ட 3 கிராமங்கள் மண்ணுக்குள் சென்றதை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்து தான் போனது.
Also Read: வக்பு வாரியம் என்றால் என்ன? அதிகாரங்கள், சட்டதிருத்த மசோதா குறித்த முழு விவரம்!
அதேசமயம் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள், உடமைகள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இந்திய ராணுவம், தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.