Today’s Cinema News: சித்தார்த் -அதிதி திருமணம் முதல் வேட்டையன் அப்டேட் வரை… டாப் சினிமா செய்திகள்!
இன்றைய சினிமா செய்திகள்: நடிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் செய்துகொண்டது முதல் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வரை இன்று செப்டம்பர் மாதம் 16-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.
இன்றைய சினிமா செய்திகள்: நடிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் செய்துகொண்டது முதல் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வரை இன்று செப்டம்பர் மாதம் 16-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.
வேட்டையன் இசை வெளியீட்டு விழா
நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது நடைபெறுகிறது என்பது குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வரும் 20-ம் தேதி வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மீனாவின் பிறந்த நாள் இன்று!
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தை துரைராஜூக்கும், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட தாய் ராஜமல்லிகாவுக்கும் 1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 16 இதே தேதியில் மகளாகப் பிறந்தவர், நடிகை மீனா. நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்ததன்மூலம் சிறுவயதிலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்கள் என்று கூறப்படும் ரஜினி, கமல், அஜித், விஜய், சரத்குமார், பிரபுதேவா, பிரபு, அர்ஜூன் என அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார் மீனா. தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். இப்படி கொடிகட்டி பறந்த கண்ணழகி மீனாவின் பிறந்த நாள் இன்று. 48-வது பிறந்த நாளை கொண்டாடும் அவரக்கு ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த் கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவை காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், அதே கோயிலில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தத்தை போலவே திருமணத்தையும் ரகசியமாகவே சித்தார்த் நடத்தியுள்ளார். சினிமா பிரபலங்களை எல்லாம் அழைக்காமல் எளிமையாக கோயிலில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார்
பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியர் புகார் வந்ததன் காரணமாக போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘ஹலமதி ஹபிபோ’. வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ உள்ளிட்ட பாடல்களுக்கு கொரியோகிராஃபி செய்த பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு எதிராக இளம் நடனக் கலைஞர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
விஜயின் கோட் வசூல் நிலவரம் என்ன?
ஏஜிஎஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைப்படம் முதல் வாரத்தில் 4 நாட்களில் 288 கோடி வசூல் எனும் இமாலய இலக்கை எட்டி உலகளவில் வசூல் வேட்டை ஆடியது. இந்தியளவில் கோட் திரைப்படம் இதுவரை 212 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஓவர்சீஸ் வசூலை பொறுத்தவரையில் 150 கோடி ரூபாய் வரை வசூல் வந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக விஜய்யின் கோட் திரைப்படம் 11 நாட்களில் 360 முதல் 380 கோடி வரை உலகளவில் வசூல் வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரீமேக் படத்தில் நடிக்கப்போகும் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், படம் இயக்குவது போன்ற பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நடிக்கும் அவரது 25 – வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை கோனேரு சத்யநாராயணா தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார் என படக்குழு அறிவித்திருந்தனர். இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கப்போகும் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா மற்றும் சூர்யா 44 படங்களில் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், அதிலிருந்து ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. இந்த நிலையில், சூர்யா பாலிவுட் திரையுலகில் வில்லனாக என்ட்ரி கொடுக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட திரைப்படம் தூம். இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளது. தூம் படத்தின் 4வது பாகம் உருவாகவுள்ள நிலையில், இப்படத்தில் வில்லனாக சூர்யா நடிக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது.
விடாமுயற்சி ரிலீஸ் தேதியை கூறிய அர்ஜுன்
அஜித்குமார் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் விடாமுயற்சி. லைக்காவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் என பலர் நடித்து வருகின்றனர். அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அர்ஜுன், இப்பொது தான் விடாமுயற்சி கிளைமாக்ஸ் சண்டை காட்சியை முடித்துவிட்டு வருகின்றேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் விடாமுயற்சி ரிலீசாகிவிடும் என்றார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன குட் நியூஸ்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். ரஜினியை போலவே இரு மகள்களும் சினிமா துறையில் தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷின் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை சமீபத்தில் இயக்கினார். மேலும் இப்படத்தில் தனது தந்தையும் சூப்பர்ஸ்டார் நடிகருமான ரஜினிகாந்தை இயக்கினார் ஐஸ்வர்யா. லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்தார். விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இப்படத்தில் நாயகர்களாக நடித்திருந்தனர். மேலும் ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் வெளியாகி பல மாதங்களாக ஓடிடியில் வெளியாகமல் இருந்த நிலையில் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.