Today’s Cinema News: கூலி நாகர்ஜுனா போஸ்டர்… விஷால் பேட்டி… டாப் சினிமா செய்திகள்!
இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினியின் ‘கூலி’ படக்குழுவினர் மற்றும் தனுஷின் ‘குபேரா’ படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர், தொடர் பாலியல் புகார்கள் இடையே ஸ்ரீரெட்டி குறித்த கேள்விக்கு விஷால் அளித்த பதில் என இன்று ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சில.
இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினியின் ‘கூலி’ படக்குழுவினர் மற்றும் தனுஷின் ‘குபேரா’ படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர், தொடர் பாலியல் புகார்கள் இடையே ஸ்ரீரெட்டி குறித்த கேள்விக்கு விஷால் அளித்த பதில் என இன்று ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சில.
ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து ட்ரெய்லர்!
ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகின்றது.
ஸ்ரேயா கோஷல் குரலில் ‘மலை’ படத்திலிருந்து வெளியான பாடல்!
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘மலை’ படத்திலிருந்து பாடகி ஸ்ரேயா கோஷல் பாடிய பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கத்தில் யோகிபாபு, லக்ஷ்மி மேனன், காளி வெங்கட் மற்றும் குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம் ‘மலை’. இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்திலிருந்து ‘கண்ணசர ஆராரோ’ பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வேட்டையன் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய மஞ்சு வாரியர்!
ரஜினியின் ’வேட்டையன்’ படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை மஞ்சு வாரியர் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நடிகை மஞ்சு வாரியர் இப்படத்துக்கான தனது டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூலி படத்தில் சைமனாக நாகர்ஜூனா
நடிகர் ரஜினியின் கூலி படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகர்ஜுனா இணைந்ததைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தனது 171-வது படத்தில் கமிட்டாகி விறுவிறுப்பாக படத்தின் வேலையில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று 28-ம் தேதி முதல் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மலையாள நடிகரான சௌபின் ஷாகிரின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. இவரைத் தொடர்ந்து இன்று டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் நாகர்ஜுனாவின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்கு சைமன் என்று பெயர் வைத்திருப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்ஜுனாவிற்கு போஸ்டருடன் வாழ்த்து சொன்ன ’குபேரா’ படக்குழு!
நாகர்ஜூனாவின் பிறந்த நாளை முன்னிட்டு தனிஷின் ’குபேரா’ படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷின் 51-வது படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ‘குபேரா’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் முகேஷை கைது செய்ய தடை!
கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இந்தநிலையில் நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த நிலையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். அடுத்த 5 நாட்களுக்கு நடிகர் முகேஷை கைது செய்யக்கூடாது என எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழா தேதி
நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘மெய்யழகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் பாலியல் சர்ச்சை… நடிகர் விஷால் பேச்சு
நடிகர் விஷால் ஹேமா கமிட்டி போல் தமிழ் சினிமாவிலும் ஒரு குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது 48-வது பிறந்தநாளை இன்று கொண்டாடிய நடிகர் விஷால், சேனை கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவரிடம் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘தமிழ் சினிமாலும் 10 பேர் கொண்ட குழுவை நடிகர் சங்கம் சார்பில் அமைக்க உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் அதன் அறிவிப்பு வரும். நடிகர் சங்கம் வெறும் ஆண்களுக்கு மட்டும் கிடையாது. பெண்களுக்கும் தான் என்று தெரிவித்துள்ளார்.