அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்துடன் பொங்கலுக்கு போட்டிப்போடும் படங்கள் என்னென்ன?
வரும் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அந்த படத்துடன் முக்கிய நடிகர்களின் படங்களும் திரையரங்குகளில் போட்டிப்போட உள்ளது குறித்து தற்போது பார்க்கலாம்.
விடாமுயற்சி: நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் ’விடாமுயற்சி’. இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள நிலையில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். இதில் அஜித் உடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பணிகள் முடிவடையாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்த படத்தில் நடிக்கும் போது நடிகர் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் உடன் குட் பேட் அக்லி படத்திலும் இணைந்தார்.
அந்த படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வந்தது. ரசிகர்களின் வேதனையை புரிந்துகொண்ட படக்குழு சமீபத்தில் டீசரை வெளியிட்டது. அந்த டீசரில் படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தது.
வீர தீர சூரன்: சேதுபதி மற்றும் சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது நடித்து வருகிறார். விக்ரமின் 62-வது படமான இதற்கு வீர தீர சூரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படமும் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.
வணங்கான்: முன்னதாக நடிகர் சூர்யா நாயகனாக கமிட்டியாகி பின்பு விலகிய படம் வணங்கான். இயக்குநர் பாலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சில பிரச்னைகள் காரணமாக சூர்யா இந்தப் படத்தில் இருந்து வெளியேறிய பிறகு நடிகர் அருண் விஜய் இந்தப் படத்திற்கு நாயகனாக தேர்வானார்.
Also read… அல்லு அர்ஜுனுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்… அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!
இப்படத்தை இயக்குநர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டூடியோஸ் நிறுவனமும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படமும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளதாக படக்குழு முன்னதாகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
கேம் சேஞ்சர்: டோலிவுட் ரசிகர்களால் மெகாஸ்டார் என்று கொண்டாடப்படும் சிரஞ்சீவியின் மகனான இவர் மாவீரா என்ற படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆர்.ஆர்.ஆர். படம் இவரது புகழை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ‘கேம் சேஞ்சர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் ராம் சரண்.
Also read… இணையத்தில் கவனம்பெறும் நயன்தாராவின் ‘KARMA SAYS’ இன்ஸ்டா ஸ்டோரி
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதிய கதைக்கு இயக்குநர் ஷங்கரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா, சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு இந்தப் படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வருகின்ற ஜனவரி மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.