சூர்யாவின் கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா? வைரலாகும் தகவல்
முன்னதாக படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிலீஸ் தள்ளிப்போகிறது என கூறியிருந்தாலும், ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது.
கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
Also read… தங்கலான் படத்திலிருந்து ‘தங்கலானே வா வா ஆதியோனே’ பாடல் வீடியோ இதோ
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் 12-ம் தேதி வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் பீரியட் காலத்தில் நடக்கும் சண்டை காட்சிகளும், சாகச காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. தீவு, மர்மம் என பின்னணி குரலுடன் தொடங்கும் ட்ரெய்லர் பிரம்மாண்டத்தின் காட்சியாக விரிகிறது. வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா தோன்றுகிறார். அதே சமயம் டிரெய்லரின் இறுதி காட்சியில் ஒருவர் மண்டை ஓடுகள் அடங்கிய மாலையை வீசியபடி குதிரையில் வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த குதிரையில் வரும் நபரை பார்த்து சூர்யா தனது உதட்டோரம் ஒரு சிரிப்பை காட்டுவது அந்த வீடியோவில் தெரிகிறது. அது யார் என்று காட்டப்படவில்லை என்றாலும் அது சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தியாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். முன்னதாக கார்த்தி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்ததால் அது கார்த்தி என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிலீஸ் தள்ளிப்போகிறது என கூறியிருந்தாலும், ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், நவம்பர் மாதம் 2ஆம் வாரத்தில் கங்குவா படத்தில் சோலோவாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.