Independence Day 2024: சுதந்திர உணர்வை மக்களிடம் தட்டி எழுப்பிய 5 படங்கள்.. இன்னிக்கே பார்த்திருங்க!
விடுதலை போராட்டத்தில் கலையும் இலக்கியமும் பெரும் பங்கு வகித்தது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட தலைவர்கள் பயன்படுத்திய முக்கிய ஆயுதமாக மேடை நாடகங்கள் அமைந்தன. அந்த வகையில், நம் தியாக வரலாறானது திரைப்படங்கள் வழியாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக உயிரையும் துட்சம் என கருதிய சுதந்திரப் போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சுதந்திர தினம்: ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் ஆகும். இந்திய சுதந்திரத்திற்கு எண்ணற்ற முகம் தெரியாத மக்கள் தொடங்கி முன்னணி தலைவர்கள் வரை உயிர் நீத்துள்ளனர். 16 வயது குதிராம் போஸ் துவங்கி 78 வயதில் இறந்த காந்தி வரை ஆகஸ்ட் 15ஆம் தேதி நினைவு கூறப்பட வேண்டியவர்கள். உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். கிட்டதட்ட 150 ஆண்டுகளுக்கு மேலாக பேராடி பெரும் போரை நடத்தி ஆங்கிலேயேரை வென்றிருக்கிறோம். குறிப்பாக விடுதலை போராட்டத்தில் கலையும் இலக்கியமும் பெரும் பங்கு வகித்தது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட தலைவர்கள் பயன்படுத்திய முக்கிய ஆயுதமாக மேடை நாடகங்கள் அமைந்தன.
அந்த வகையில், நம் தியாக வரலாறானது திரைப்படங்கள் வழியாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக உயிரையும் துட்சம் என கருதிய சுதந்திரப் போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது என்னென்ன படங்கள் அதன் விவரங்களை பார்ப்போம்.
வீரபாண்டிய கட்டபொம்மன்:
ஆங்கிலேயர்களை எதிர்த்து நம் நாட்டிற்காக போராடி தன்னை தூக்கு மேடை ஏற்றிய போது தூக்கு கயிற்சை முத்தமிட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொமன். இந்த மாபெரும் வீரரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. 1959ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியானது. இந்த படம் தமிழ் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்தது. 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாட்டப்பட்டது. இதற்கு காரணம் சிவாஜி கணேசனின் தத்ரூபமாக நடிப்பு என்றே சொல்லலாம். இவரின் ஒவ்வொரு வசனமும் சண்டை காட்சிகளும் திரை அரங்கே அதிர வைத்தது. மேலும், ஜெமினி கணேசன், பத்மினி, வி.கே.ராமசாமி, ஜாவர் சீதாராமன் என அனைவரும் கதாபாத்திரங்களோடு ஒன்றி போய் வாழ்ந்து வந்தனர்.
கப்பலோட்டிய தமிழன்:
தமிழ் சினிமாவின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய படம் கப்பலோட்டிய தமிழன். இந்த திரைப்படம் நவம்பர் 7ஆம் தேதி 1962ஆம் ஆண்டு வெளியானது. 1944 ஆண்டு ம.பி.சிவஞானம் எழுதிய நூலை தழுவி படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன் , டி.கே.சண்முகம், டி.பி.முத்துலட்சுமி, நாகயா உள்ளிட்டோர் நடித்தனர். இந்த படம் சிவாஜி கணேசனுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்த அளவுக்கு தன் நடிப்பை இதில் காட்டியிருந்தார். தனக்கான பெரும் சவாலான கதாபாத்திரம் வ.உ.சியாக நடித்தது மட்டுமே என்று ஒரு பேட்டியில் கூட சிவாஜி கணேசன் கூறியிருந்தார். சிவாஜி கணேசன் எத்தனையோ படங்களில் நடத்திருந்தால் கப்பலோட்டிய தமிழன் அவருக்கு ஸ்பெஷல் என்றே கூறலாம். வ.உ.சியின் நாட்டு பற்றையும் போராட்ட உணர்வையும் திரையில் சித்திரமாக வரைந்தார் சிவாஜி.
சிறைச்சாலை:
1996ஆம் ஆண்டு சிறைச்சாலை (மலையாளத்தில் காலாபாணி) என்கிற படம் வெளியானது. பிரியதர்ஷனின் இயக்கத்தில் மோகன்லாலின் தயாரிப்பில் உருவான இந்த படத்தை பேன் இந்தியா படங்களின் முன்னோடி எனலாம். இந்த படத்தில் மோகன்லால், பிரபு, தபு, வினித், அம்ரீஷ் புரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் சிறப்பான மேக்கிங் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. அப்படி பார்த்து பார்த்து செத்துக்கியிருக்கிறார் பிரியதர்ஷன். இந்த படம் அசல் வடிவமான மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டடது. இந்திய சுதந்திர பேராட்ட காலத்தில் நாட்டின் விடுதலைக்காக அகிம்சை முறையில் போராடியவர்கள், பயங்கரவாத செயல்களைச் செய்தவர்கள் போன்றோர்களை அந்தமானில் உள்ள சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது பிரிட்டீஷ் அரசாங்கம். இது தொடர்பான வரலாற்று சம்பவங்களை புனைவுப்பாத்திரம் வழியாக உணர்ச்சிகரமாக விவரித்திருக்கிறது சிறைச்சாலை படம். கோவர்த்தன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தி இருப்பார் மோகன்லால். அந்தமான் சிறையில் இருக்கும் கோவர்த்தனனுக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை உணர்ச்சிகரமாகவும், கட்சிதமாகவும் காட்டியிருப்பார் பிரியதர்ஷன்.
ஹே ராம்:
கடந்த 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஹே ராம்’. இப்படத்தில் கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, ஓம் புரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சுதரந்திர போராட்டம் உச்சம் தொட்ட காலத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக காந்தியை கொல்ல திட்டமிடும் கமலின் கதாபாத்திரம் இறுதியில் மனம் திருந்தி அவரிடமே செல்லும் கதை அம்சத்தை கொண்ட ஹே ராம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பாராட்டுகளை பெற்றது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை மையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் காந்தியின் படுகொலை, மத கலவரம், இந்து, இஸ்லாமிய ஒற்றுமை குறித்தும் விவரிக்கிறது.
இந்தியன்:
கடந்த 1996ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் பாகம் 1 படம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, கவுண்டமி, செந்தில், சுகன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஊழலுக்கு எதிராக அரசு அதிகாரிகளை கொலை செய்யும் 70 வயது முதியவரான கமல்ஹாசன் இறுதியில் லஞ்சம் வாங்கியது தனது மகன் என தெரிந்தவுடன் அவரையும் கொல்கிறார். சுதந்திர போராட்ட வீரரான கமல், எதற்காக ஊழல் எதிராக போராடுகிறார், இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்பதை கதையாக கொண்ட இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி இருப்பார் ஷங்கர்.