5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Meiyazhagan Movie Review: ’மெய்யழகன்’… நிஜமாவே அவ்வளவு அழகானவன் – விமர்சனம் இதோ!

சொந்த ஊர், உறவுகள் ஆகியவற்றைப் பிரிந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு, மீண்டும் அதே ஊருக்கு திரும்புகிற ஒருவரின் பரிதவிப்பையும், மனவோட்டங்களையும் ஆழமாகப் பேசி இந்த உலகில் பலரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் பிரேம் குமார்.

Meiyazhagan Movie Review: ’மெய்யழகன்’… நிஜமாவே அவ்வளவு அழகானவன் – விமர்சனம் இதோ!
மெய்யழகன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Sep 2024 13:14 PM

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் அடுத்ததாக கார்த்தியின் 27-வது படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் நேற்று 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  சொந்த ஊர், உறவுகள் ஆகியவற்றைப் பிரிந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு, மீண்டும் அதே ஊருக்கு திரும்புகிற ஒருவரின் பரிதவிப்பையும், மனவோட்டங்களையும் ஆழமாகப் பேசி இந்த உலகில் பலரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் பிரேம் குமார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது வேலைக்காக குடும்பங்களை பிரிந்து பலர் சென்னையில் வந்து வசிக்கின்றனர். அவர்கள் குடும்பம் சொந்த ஊரிலே இருப்பார்கள். அவர்களை பிரிந்து வாழ்வது ஒருபுறம் கடினமான ஒன்றாக இருக்கும். அதே நேரத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களது சொந்த ஊரை விட்டு, உறவுகளை விட்டு இரவோடு இரவாகா ஒரு குடும்பமே யாருக்கும் தெரியாமல் பிழைப்பு தேடி சென்னை வருவது வலி மிகுந்தது. அப்படி பல வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரை விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை வரும் அரவிந்தசாமி மீண்டும் தனது சொந்த ஊரிற்கு செல்லும் போது அங்கு அவர் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் சுற்றியே இந்தப் படம் அமைந்துள்ளது.

தஞ்சாவூரில் இருக்கும் நீடாமங்கலம் என்ற கிராமத்தில் பூர்வீக வீட்டில் குடியிருக்கும் பதின் வயது அரவிந்தசாமி சொத்து தகராறு காரணமாக அவர்கள் வீடு அவரின் அத்தை குடும்பத்திற்கு கை மாறி விட பின்பு தனது அப்பா மற்றும் அம்மா என மொத்த குடும்பமும் தஞ்சாவூரை காலி செய்துவிட்டு சென்னைக்கு குடியேறுகின்றனர். 22 வருடங்களுக்கு பிறகு அரவிந்தசாமியின் சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக மீண்டும் தஞ்சாவூருக்கு வருகிறார் அரவிந்தசாமி. வந்த இடத்தில் ஒரு சம்பிரதாயத்திற்காக திருமணத்தில் தலை காட்டி விட்டு இரவோடு இரவாக சென்னைக்கு கிளம்பி வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் அரவிந்தசாமியை அவரது உறவுக்காரரான பெயர் தெரியாத கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார். அரவிந்தசாமி நிழல் போல் கூடவே இருந்து கொண்டு அவரை அத்தான்… அத்தான்… என அன்பு தொல்லை கொடுக்கிறார். ஆனால் கார்த்தியை யார் என்று அரவிந்த்சாமிக்கு சுத்தமாக ஞாபகம் வரவில்லை. அவரும் மற்றவர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்தபோதும் கார்த்தி தனக்கு எந்த முறையில் உறவு என அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Also read… ரஜினி, அஜித், மோகன்லால், மம்முட்டியிடம் உள்ள பொதுவான குணங்கள் – மஞ்சு வாரியர் பகிர்ந்த தகவல்

உள்ளூரில் குடிகாரனுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்ட முறைப்பெண் ‘நான் உன்னையே கட்டியிருக்கலாம்’ என்று ஏக்கத்தோடு அரவிந்த்சாமியிடம் சொல்வது, தங்கையான கல்யாணப் பெண், அண்ணன் அரவிந்த்சாமி கொண்டுவந்த ‘கிஃப்டை’ மேடையிலேயே பிரித்து அணிந்து கொள்ளும் பாசம், பல வருடங்கள் கழித்து வந்திருக்கிற அத்தானை ஏமாற்றி, ஒரு நாள் இரவு தங்க வைத்து விடுகிற மாப்பிள்ளையின் மகிழ்ச்சி என எல்லா படங்களிலும் இறுதியில் அழ வைக்கும் காட்சி இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே ரசிகர்களை அழவைத்து எமோஷனலாகவும் கார்த்தியின் நகைச்சுவையில் கலகலப்பாவும் கடக்கிறது முதல்பாதி.

இரவோடு இரவாக மீண்டும் சென்னைக்கு செல்ல நினைத்த அரவிந்தசாமியின் பஸ்ஸை மிஸ் செய்யவைத்து அவரை தன்னுடன் தன் வீட்டில் தங்க வைக்கிறார் கார்த்தி. அத்தான் அரவிந்தசாமியுடன் மது அருந்திய கார்த்தி இரண்டாம் பாதியில் வெண்ணிப் பறந்தலைப் போர், சோழனின் வீரம், ஈழப் போர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு திதி கொடுப்பது, ஜல்லிக்கட்டு குறித்து பேசுவது என்பதாக கடக்கிறது. அந்த ஓர் இரவில் இருவருக்கும் ஆன உரையாடல்கள், நிகழ்வுகள், அன்பு, பாசம், நேசம், அழுகை, பால்ய நினைவுகள் ஆகியவை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர். போற போக்கில் அரவிந்தசாமிக்கு தான் யார் என்ற உண்மையை கார்த்தி மூலம் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இருவரது நட்பு ஓர் இரவில் வளர்ந்து விடுகிறது.

Also read… கோலிவுட் சினிமாவில் தீபாவளி ரேஸில் களமிறங்கும் 4 பெரிய படங்கள் – ஹிட் அடிக்கப்போவது யார்?

அப்போது தனக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு அரவிந்தசாமியின் பெயரை (அருள்மொழி) வைக்க உள்ளதாக கார்த்தி சொல்ல, மேலும் காலையில் ஊருக்கு செல்வதற்கு முன் என் மனைவி பேர் என் பேர் எனக்கு பிறக்கப்போகும் குழந்தை பெயரை சொல்லி என்னை வாழ்த்திட்டு போகனும் என்று கார்த்தி சொன்னதை கேட்ட அரவிந்தசாமி அதிர்ந்து விடுகிறார். மீண்டும் கார்த்தியின் பெயர் என்ன என்பதை கண்டுபிடிக்க முயன்று அது தெரியாமல் குற்ற உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்று அங்கே இருந்து இரவோடு இரவாக சொல்லாமல் சென்னை திரும்பிவிடுகிறார்.

கடைசியில் கார்த்தியின் பெயரை அவருக்கே தெரியாமல் அர்விந்த் சுவாமி கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படம் சிறுவயது காதல் உணர்வுகளை மென்மையான முறையில் வெளிப்படுத்தி பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது. அந்தப் படம் கொடுத்த ஊக்கத்தில் தற்போது அதே போன்ற ஒரே இரவில் நடக்கும் கதையாக இந்த மெய்யழகன் படம் உருவாகி இருக்கிறது.

’மெய்யழகன்’ நிஜமாகவே ஒரு அழகனாகதான் தெரிகிறான்….

Latest News